Cricket
இந்தியா கோச்-க்கு சர்பிரைஸ்… அவரோட ரியாக்ஷன் இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று தனது பயணத்தை தொடங்குகிறார். இவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
இதையொட்டி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஆடியோ வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ராகுல் டிராவிட் குரலில் வாழ்த்து தகவல்களும், திரையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக கழித்த வெற்றி தருணங்களின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றை கவுதம் கம்பீர் லேப்டாப் ஒன்றில் பார்க்கும் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
“வணக்கம் கவுதம், உலகின் மிகவும் சுவாரஸ்ய பணி- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வரவேற்கிறேன். இந்திய அணியுடனான எனது பயணம் முடிவுக்கு வந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. பார்படோஸில் அன்ற நடந்த சம்பவங்கள், அதன்பிறகு சில நாட்கள் கழித்து மும்பையில் நடைபெற்ற சம்பவங்கள் என கனவையும் மீறிய ஒன்று. எல்லாவற்றையும் தாண்டி, அணியுடன் நான் உருவாக்கிக் கொண்ட நினைவுகள் மற்றும் தோழமைகளை நான் பொக்கிஷமாக நினைக்கிறேன்.”
“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் உங்களுக்கும் இதேபோன்ற நினைவுகள் ஏற்பட வாழ்த்துகிறேன். உங்களின் ஒவ்வொரு அணியிலும் காயமில்லாமல் முழு உடற்தகுதி கொண்ட வீரர்கள் அமைவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் இன்னமும் கொஞ்சம் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
“பயிற்சியாளர்களாக நாம், நமது இயல்பை தாண்டி அறிவுப்பூர்வமானவர்கள் மற்றும் ஆற்றல்மிக்கவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உனது அணியில் சக வீரராக, களத்தில் உனது முயற்சிகள் அனைத்தையும் கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். உன்னுடன் பேட்டிங் செய்தது, ஃபீல்டிங் செய்தது என எல்லாவற்றிலும் சரண்டர் ஆகாமல் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.”
“பல ஐபிஎல் சீசன்களில் வெற்றி பெற வேண்டும் என்ற உனது நோக்கம், அதற்காக இளம் வீரர்களுடன் உனது பணி மற்றும் அவர்களிடம் இருந்து சிறப்பானவற்றை கேட்டுப் பெறும் திறமையை நான் அதிகம் பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட் மீது எத்தனை அன்பு கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இவை அனைத்தையும் புதிய பணியில் நீங்கள் கொண்டுவருவீர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”
“எத்தனை கடின சூழலிலும், உனது அணி, உதவியாளர் குழு மற்றும் எல்லாவற்றையும் கடந்து ரசிகர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். எத்தகைய சூழலிலும், ஒரு அடி பின் சென்று முகத்தில் புன்னகை செய்ய மறக்க வேண்டாம். அது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். உனக்கு எல்லாமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் கவுதம். இந்திய அணியை மேலும் பல உச்சிகளுக்கு கொண்டு செல்வாய் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், “இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்த தகவல் எனக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்கு காரணம் நான் அவருக்கு மாற்றாக பொறுப்பேற்று இருக்கிறேன் அல்லது அவரது பணியில் நான் இருக்கிறேன் என்பதை கடந்து, நான் விளையாடிய காலக்கட்டத்தில் நான் எப்போதும் வியந்து பார்க்கும் நபர் இவர் என்பது தான்.”
“பல நேர்காணல்களில் இதை கூறியிருக்கிறேன். நான் இதுவரை விளையாடியதில் மிகவும் சுயநலமில்லா வீரர் இவர் தான். இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான எல்லாவற்றையும் ராகுல் பாய் செய்திருக்கிறார். இவரிடம் இருந்து தற்கால மற்றும் எதிர்கால வீரர்கள் இந்திய கிரிக்கெட் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார்.