Cricket
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – ஓ.டி.டி. வியூஸ் இத்தனை கோடிகளா?
டி20 உலகக் கோப்பை 2024 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவு செய்தது. பரபரப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை ஓ.டி.டி. தளத்தில் எத்தனை பேர் பார்த்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் சுமார் 5.3 கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஒரே சமயத்தில் 5.3 கோடி பேர் பார்த்துள்ள நிலையிலும், இது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை விட குறைவு என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை ஓ.டி.டி. தளத்தில் 5.9 கோடி பேர் பார்த்து ரசித்தனர்.
நேரலை கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்ததில் 5.9 கோடி வியூஸ் இன்றுவரை உச்சமாக விளங்குகிறது. இறுதிப் போட்டி தவிர இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நாக்-அவுட் சுற்று போட்டியை 3.9 கோடி பேர் பார்த்தனர். இந்த போட்டி ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளை தொலைகாட்சி மற்றும் டிஜிட்டலில் ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ஸ்டார் குழுமம் கைப்பற்றி இருந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டி டிஸ்னி ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொலைகாட்சியில் இந்த போட்டியை எத்தனை பேர் பார்த்தனர் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.