Cricket
IPL2025: லிஸ்ட் போடும் உரிமையாளர்கள்.. சம்பவம் உறுதி..!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தின் போது ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சந்திக்கும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பல மாற்றங்களை செய்யக் கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-இடம் தங்களின் செலவீனங்களை அதிகப்படுத்த கோரிக்கை விடுக்க உள்ளனர். தற்போது ஒரு வீரருக்கு அளிக்கக்கூடிய சம்பளமாக ரூ. 90 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனை ரூ. 130 முதல் ரூ. 140 கோடி வரை அதிகப்படுத்த அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர் என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025 மற்றும் 2026 தொடர்களில் 84 போட்டிகளும், ஐபிஎல் 2027 தொடரில் 94 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற வகையில், வீரர்கள் அதிக சம்பளம் கேட்கக்கூடும் என அணி உரிமையாளர்கள் நினைக்கின்றனர். இதற்கு ஏதுவாக ஊதியத்தை அதிகப்படுத்துவது சரியாக இருக்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் இடையே நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று ஐபிஎல் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் அணிகள் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சில ஐபிஎல் அணிகள் அதிகபட்சம் எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ-இடம் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பிசிசிஐ சார்பில் அதிகபட்சம் ஐந்து வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.