Connect with us

Cricket

கேப்டன்சி விவகாரம்: அந்த காரணத்தை ஏத்துக்க முடியாது.. அகார்கர், கம்பீரை கிழித்த முன்னாள் வீரர்..!

Published

on

இந்திய அணியின் டி20 கேப்டன்சியை சூர்யகுமார் யாதவுக்கு வழங்குவதில் பிசிசிஐ தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இலங்கை தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பில் இந்த விஷயத்தை தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் உறுதிப்படுத்தி இருந்தது.

கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இவை அனைத்திற்கும் முரணாக இருக்கும் வகையில், இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். மேலும், ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.

கேப்டன்சி விவகாரத்தில் தேர்வுக்குழு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஸ்ரீகாந்த் ஹர்திக் பாண்டியா அவரது உடல்நிலை காரணங்களால் தான் கேப்டன்சி பதவியை இழக்கிறார் என்று அஜித் அகார்கார் கூறியதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்தார்.

“டிரெசிங் ரூமில் இருந்து வந்த கருத்தா? அதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆம், சூர்யகுமார் கேப்டனாக செயல்படும் திறமைகளை கொண்டவர் தான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர் கேப்டனாக சிறப்பாக செயல்படுவார். ஆனால், ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”

“சூர்யகுமார் யாதவ் சிறந்த நபர். எனக்கு அவரை பிடிக்கும். அதேபோன்று தான் ஹர்திக். அவரை நீக்கியதற்கு அவர்கள் கொடுக்கும் காரணங்களை ஏற்க முடியாது. வெளிப்படையாக கூறுங்கள். நாங்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குகிறோம், நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல நினைக்கிறோம். நீண்ட காலத்திற்கு சூர்யகுமார் யாதவ் சிறப்பாக இருப்பார் என்று நினைக்கிறோம். அதை தெளிவாக்குங்கள், பயமின்றி அதனை கூறுங்கள்.”

“அவர்கள் டிரெசிங் ரூமில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறினார்கள். அது ஐபிஎல்-இல் இருந்தே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உடல்நிலையை மட்டும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் ஐபிஎல் தொடர் முழுக்க விளையாடி உள்ளார். அவர் பந்துவீசி இருக்கிறார். அவர் ஐபிஎல்-இல் சிறப்பாக விளையாடாமல் இருந்திருக்கலாம். அது மற்றொரு பிரச்சினை. மும்பை இந்தியன்ஸ் தகுதி பெறவில்லை.”

“உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்தார், நன்றாகவும் விளையாடினார். அவரது உடல்நிலை என்ற காரணத்தை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நானும் தலைவராக இருந்துள்ளேன். வீரர்களை தேர்வு செய்துள்ளேன், நிராகரித்து இருக்கிறேன். நிறைய சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறேன். நான் கடவுள் என்றெல்லாம் கூறவில்லை, நானும் தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுத்த காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,” என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *