Cricket
வீட்டை எரிச்சாங்களா? லிட்டன் தாஸ் சொன்னது இதுதான்..!
வங்காளதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் அங்கு ஆட்சி மாற்றம் அமைந்துள்ளது. இதனால் வங்காளதேசத்தில் தற்காலிக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வன்முறையில் அந்நாட்டு பிரதமர் அலுவலகம், முந்தைய ஆட்சியாளர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதோடு வங்காளதேச கிரிக்கெட் வீரரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டாத பரவிய தகவல்களுக்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில், என் நாட்டு மக்களே, உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சமீப காலங்களில் என் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தியில் உண்மையில்லை. அத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள். நானும், என் குடும்பத்தாரும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
வங்காளதேசம் வகுப்புவாதமற்ற நாடு என்பதை நான் அதிகம் நம்புகிறேன். இந்த நாட்டை அனைவரும் சேர்ந்து எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த தேசத்துடன் எனது தினஜ்பூர் மக்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வந்ததை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மேலும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். நாம் ஒன்றிணைந்து நம் நாட்டில் இருந்து வன்முறையை ஒதுக்கி வைப்போம் என்று நம்புகிறேன். இந்த நாடு நம் அனைவருக்குமானது, என லிட்டன் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் வங்காளதேச வன்முறையின் போது எரிக்கப்பட்டது அந்நாட்டு முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மொர்டசாவின் வீடு ஆகும். இவர் அந்நாட்டின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.