Connect with us

Cricket

அறிக்கை வரட்டும், பார்ப்போம்.. ஷமிக்கு ஷாக் கொடுத்த ஜெய் ஷா

Published

on

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது இந்திய அணியில் மீண்டும் இணைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் முகமது ஷமி, தனது உடல்நலம் தேறிவிட்டதாகவும் அணிக்காக மீண்டும் விளையாட ஆவலோடு காத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும், அடுத்த மாதம் துவங்கும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.

ரஞ்சிக் கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிரண்டு போட்டிகளில் முகமது ஷமி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முகமது ஷமி இந்திய அணியில் திரும்புவது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய ஜெய் ஷா, “முகமது ஷமி ஆஸ்திரேலியா சீரிசில் விளையாடுவாரா, இல்லையா என்பதை அவரது ஃபிட்னஸ் தான் முடிவு செய்யும். மேலும் இது பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கும் அறிக்கையை பொருத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜெய் ஷா இதே விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, “ஷமி பற்றிய உங்களது கேள்வி மிகவும் சரியானது. அவர் நிச்சயம் இருப்பார், அவர் அனுபவம் மிக்கவர். அவர் ஆஸ்திரேலியாவில் நமக்கு தேவை,” என்று பதில் அளித்திருந்தார்.

தற்போது இதே விஷயத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி அறிக்கையை பொருத்து ஷமி ஆஸ்திரேலிய சீரிஸில் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனால், முகமது ஷமி எப்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்ற கேள்விக்கு பதில் இல்லாத சூழல்தான் நிலவுகிறது.

google news