Cricket
மிகவும் பிடித்த பந்துவீச்சாளர்கள்.. ஷமி சொன்ன 2 பேர் யார் தெரியுமா?
இந்திய அணியில் எதிரணியை திணறிடித்த பந்துவீச்சாளர்கள் பட்டியல் மிகவும் பெரியது என்றே கூறலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேகபந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு மற்றும் பார்ட்-டைம் என ஆட்ட சூழலுக்கு ஏற்ப விக்கெட்டுகளை சொல்லி எடுப்பதில் பல வகையான கில்லி வீரர்களை இந்திய கிரிக்கெட் கடந்து வந்துள்ளது.
கபில் தேவ், ஜாகீர் கான் துவங்கி பலர் தங்களது தடாலடியான பந்துவீச்சு மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் என்ற போதிலும் விக்கெட் எடுப்பதில் கைத்தேர்ந்த பந்துவீச்சாளராக அறியப்படுபவர் கபில் தேவ். ஆக்ரோஷமான இடது கை வேகப்ந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது டைம் & லென்த் பந்துகளில் இந்திய அணிக்கு சாதகமான முடிவுகளை பல போட்டிகளில் பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் ஆவார்.
இவர்கள் தவிர சுழற்பந்து வீச்சில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் என இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்த பட்டியலில் சமீப ஆண்டுகளில் தன் பெயரை ஓங்கி ஒலிக்க செய்துள்ளவர் ஜஸ்பிரித் பும்ரா. வித்தியாசமான உடல்மொழி கொண்டு போட்டியில் எதிரணியின் வெற்றியை தட்டிப்பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இத்தனை பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில், முகமது ஷமியிடம் அவருக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர்கள் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் நன்கு அறியப்படும் இருவரை குறிப்பிட்டார்.
“நிறைய பேர் உள்ளனர். ஆனால் பெயர்களை குறிப்பிட சொன்னால், எனக்கு வக்கர் யூனிஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரை மிகவும் பிடிக்கும்,” என்று முகமது ஷமி தெரிவித்தார்.