Cricket
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2-வது வீரர்.. வேற லெவல் சாதனை படைத்த நேபாளம் வீரர்
நேபாளம் அணியின் சுழற் பந்துவீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான சந்தீப் லமிஷேன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வைத்து அசத்தலான உலக சாதனை படைத்துள்ளார். இன்று (ஜூன் 17) காலை நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் நேபாளம் அணி வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இவரது சராசரி 12.58 ஆகவும், எகனாமி 6.29 ஆகவும் உள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை சந்தீப் படைத்துள்ளார். இன்றைய போட்டி அவர் களமிறங்கிய 54-வது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது.
இந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய சந்தீப் லமிஷேன் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஓவர் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டென் எடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே இவர் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், இன்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளுடன் 100 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தினார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். மேலும், இவர் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல் இருந்த லமிஷேன் கடந்த வாரம் தான் மீண்டும் களமிறங்கினார். கடந்த வாரம் நடைபெற்ற நேபாளம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டியில் தான் சந்தீப் லமிஷேன் விளையாடினார். இடையில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக இவருக்கு அமெரிக்க விசா இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ்-க்கு விரைந்த சந்தீப் லமிஷேன் அங்கு நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார்.