Cricket
அதிக சிக்சர்கள்.. கெயில் சாதனையை புரட்டி எடுத்த பூரன்
ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயில் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் வைத்து பூரன் இந்த சாதனையை படைத்தார். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் (டிகேஆர்) மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் (பேட்ரியட்ஸ்) அணிகளிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டில் க்ரிஸ் கெயில் 135 சிக்சர்களை விளாசியிருந்தார். இந்த ஆண்டில் இதுவரை மட்டும் நிக்கோலஸ் பூரன் 139 சிக்சர்களை விளாசியிருக்கிறார். இதன் மூலம் அவர் க்ரிஸ் கெயில் சாதனையை தகர்த்துள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் பூரன் 43 பந்துகளில் 97 ரன்களை விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகளும், ஒன்பது சிக்சர்களும் அடங்கும்.
ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயில் டாப் 10-இல் ஆறு முறை முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுளும் அதன்பிறகு 2015, 2016 மற்றும் 2017 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் க்ரிஸ் கெயில் ஒரே ஆண்டில் அசித சிக்சர்களை விளாசியுள்ளார்.
எனினும், நிக்கோரஸ் பூரன் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஆண்டில் இதுவரை 58 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிக்கோலஸ் பூரன் 139 சிக்சர்களை விளாசியுள்ளார். இதில் அவர் 13 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
நேற்றைய போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய பூரன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக டிகேஆர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பேட்ரியட்ஸ் அணி 206 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டிகேஆர் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.