Cricket
இப்போ இதுமட்டும் தான் என் கண்ட்ரோல்-ல இருக்கு – சூர்யகுமார் யாதவ்
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். நாக்பூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடிய சூர்யகுமார் அதன்பிறகு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். அதன்பிறகு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் சூர்யகுமார் யாதவ் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். முதற்கட்டமாக புச்சி பாபு கோப்பை தொடரிலும், அதன்பிறகு நடைபெற இருக்கும் துலீப் கோப்பை தொடரிலும் சூர்யகுமார் களமிறங்க உள்ளார். இதனிடையே மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது பற்றி சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பல வீரர்கள் கடுமையாக உழைத்து, அந்த இடத்திற்கு வந்துள்ளனர். நானும் அப்படியே டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியதும், எனக்கு காயம் ஏற்பட்டு விட்டது. வாய்ப்பு வழங்கப்பட்ட பல வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்கள் அணியில் இருக்க தகுதி வாய்ந்தவர்கள்.”
“தற்போதைக்கு நான் அணியில் விளையாட வேண்டுமானால், அந்த முடிவை எடுக்கும் இடத்தில் நான் இல்லை. தற்போது என் கட்டுப்பாட்டில் இருப்பது நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதாக மட்டும்தான். இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்,” என்று சூர்யகுமார் யாதவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.