Cricket
தெருவில் ரசிகரை அடிக்க பாய்ந்த பாக். வீரர் – அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப். டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறி விட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் தனது மனைவியுடன் ஃபுளோரிடா வீதிகளில் காணப்பட்டார். அப்போது அந்த வழியே வந்த ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ரௌஃப்-இடம் எதையோ கூறுகிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஹாரிஸ் அந்த ரசிகரை தாக்க முற்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. வீடியோவின் படி ரசிகர் கூறிய கருத்துக்களை கேட்டதும் ஹாரிஸ் ஆத்திரமடைவது தெளிவாக பதிவாகி இருக்கிறது. இதோடு, ரசிகரை தாக்க வேகவேகமாக அவரை நோக்கி ஹாரிஸ் செல்கிறார். இதை கூடவே இருந்து பார்த்த, ஹாரிஸ்-இன் மனைவி அவரை தடுக்க முற்பட்டார்.
எனினும், மனைவியிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஹாரிஸ், ரசிகரை நோக்கி ஆக்ரோஷமாக சென்றார். உடனே அங்கிருந்தவர்கள் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ரசிகரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஹாரிஸ் ரௌஃப் மற்றும் அந்த ரசிகர் இடையே கடுமையான வாக்குவாதம் அரங்கேறியது. அப்போது ரசிகரை பார்த்து, நீ இந்தியர் தானே? என கேட்டுக் கொண்டு கோபமாக திட்டினார். இதை கேட்ட ரசிகர், நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் என்று பதில் அளித்தார்.
ரசிகருடன் சண்டைக்கு சென்ற ஹாரிஸ் ரௌஃப்-ஐ அவரது மனைவி நீண்ட நேரம் சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும், ஹாரிஸ் சற்றும் பதில் அளிக்காமல், ரசிகரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் மற்றும் ரசிகர் இடையே பொதுவெளியில் அரங்கேறிய மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோசமான டி20 உலகக் கோப்பை தொடரை அடுத்து பாபர் அசாம், முகமது ஆமிர், இமாத் வாசிம், ஹாரிஸ் ரௌஃப், ஷதாப் கான் மற்றும் அசாம் கான் ஆகியோர் லண்டனில் விடுமுறையை கழித்துவிட்டு, அதன்பிறகே நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். இவர்கள் தங்களது குடும்பத்தாருடன் விடுமுறையை செலவழிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.