Cricket
3 விக்கெட் மந்திரம்.. போட்டிக்கு முன் கம்பீர் கூறியது என்ன? ரியான் பராக்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடுவதற்கு இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரியான் பராக் பந்துவீச்சில் செய்த மேஜிக் மிக முக்கிய காரணமாக அமைந்தது. 214 எனும் கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி அபாரமான துவக்கத்தை கொடுத்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன் அடிக்காமல் விக்கெட்டை பறிக்கொடுத்தது, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்தியா சார்பில் வெறும் 1.2 ஓவர்களை பந்துவீசிய ரியான் பராக் இலங்கை அணியின் கமிண்டு மெண்டிஸ், மஹேஷ் தீக்ஷனா மற்று் தில்ஷன் மதுஷனகா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் காரணமாக இலங்கை அணி 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 43 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ரியான் பராக் போட்டிக்கு பிறகு, பந்துவீச்சு குறித்தும், அதில் கவுதம் கம்பீர் பங்கு குறித்தும் மனம்திறந்து பேசினார்.
அப்போது, எனக்கு பந்துவீச்சு மிகவும் பிடிக்கும். நெட்ஸில் எங்கு பந்துவீச வேண்டும் என்பது குறித்து நிறைய பேச்சுவார்த்தை நடந்தது. இது தொடர்பாக கவுதம் கம்பீரிடம் அதிக பேச்சுவார்த்தை நடந்தது. 16 மற்றும் 17 ஆவது ஓவர்களில் விக்கெட்டில் ஸ்பின் இருந்தால், எப்படி பந்துவீச வேண்டும் என்பது பற்றி கவுதம் கம்பீருடன் ஆலோசனை செய்தேன்.
வீரர்கள் எனது பணியை எளிமையாக்கி விட்டனர். நான் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் அளவுக்கு பந்துவீசினாலே போதுமானது என்ற நிலை உருவானது. பந்தும் நன்றாக திரும்பியது, என்று தெரிவித்தார்.