Cricket
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் கேப்டன்.. மோசமான சாதனை படைத்த மசூத்
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி பல சாதனைகளை படைத்தது.
இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து, பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை வங்கதேசம் பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேசம் அணி வெற்றி பெற தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
சொந்த மண்ணில் இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி, தொடரை இழந்த பாகிஸ்தான் அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதோடு பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் ஷான் மசூத் தேவையற்ற சாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் ஐந்து தோல்விகளை பெற்ற முதல் கேப்டனாக ஷான் மசூத் இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் பொறுப்பேற்றார். முன்னதாக பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாம் பொறுப்பேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான சாதனையோடு, ஜாவெத் புர்கியின் சாதனையை மசூத் முறியடித்துள்ளார். ஜாவெத் புர்கி முன்னதாக டெஸ்ட் கேப்டனாக இருந்த போது பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது. தற்போது இதனை முறியடித்த ஷான் மசூத் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஷான் மசூத், “அணி தேர்வில் சீரான அனுகுமுறையை கொண்டுவர பணியாற்ற வேண்டியுள்ளது. வீரர்களின் தோல்வியை ஏற்க வேண்டியுள்ளது. தற்போது ஃபார்மில் இருக்கும் வீரரை தேடுவது அவசியம் ஆகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் விளையாடுவதில்லை என்பதால், வீரர்களை தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்கள் இல்லாத சூழல் நிலவுகிறது,” என்று தெரிவித்தார்.