Cricket
மோசமா நடத்துனாங்க, ஆஸி.யை பொளந்த இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 2020-21 ஆண்டு இந்திய அணி மேற்கொண்ட ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மிக மோசமாக இருந்ததாக ஷர்துல் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு தேவையான வசதிகள் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மிக மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் எங்களை மிக மோசமாக நடத்தினார்கள். நான்கு, ஐந்து நாட்களுக்கு தங்கும் விடுதியில் ஹவுஸ்கீப்பிங் சேவை வழங்கப்படாது. போர்வைகளை மாற்ற வேண்டுமெனில், கடுமையான உடல் அசதியிலும் ஐந்து மாடிகள் வரை நடக்க வேண்டி இருக்கும். டிம் பெய்ன் (அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன்) நேர்காணல்களில் சிலவற்றை கேட்டேன். அவர் பொய் சொல்கிறார். ஊடகத்திற்காக அவர் அப்படி பேசுகிறார். ஆனால் உண்மை எனக்குத் தான் தெரியும்.
விராட் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அஜிங்கியா ரஹானே (அந்த தொடரில் இந்திய கேப்டன்) மற்றும் ரவி சாஸ்திரி (அந்த தொடரில் இந்திய பயிற்சியாளர்) ஆகியோர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் எங்களுக்கு தேவையானதை வழங்க அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
முதல் முறையாக, நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, ஆஸ்திரேலியர்களை பார்க்கக்கூட விரும்பவில்லை. போய் உங்களது டிரெசிங் ரூமில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்ல நினைத்தோம், என்று தெரிவித்தார்.
விராட் கோலி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது, முக்கிய வீரர்களுக்கு காயம் என பல இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 எனும் கடின இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.