Cricket
புச்சி பாபு தொடர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஃபீல்டர் – உடனே மன்னிப்பு கேட்ட சூர்யகுமார்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தற்போது புச்சி பாபு தொடரில் விளையாடி வருகிறார். மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பின் அணியில் களமிறங்கியுள்ள சூர்யகுமார் கோயம்புத்தூரில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.
போட்டியின் போது பந்துவீசிய சூர்யகுமார் திடீரென வீசிய பந்து பீமராக மாறியது. இந்த பந்தை சரியாக கணித்த தமிழக வீரர் அதனை பவுண்டரிக்கு விளாசினார். இந்த ஷாட் அடிக்கப்படும் போது ஷாட் லெக்-இல் நின்றிருந்த ஃபீல்டர் காயமுறும் சூழல் உருவானது. எனினும் நல்வாய்ப்பாக அவர் தப்பித்துக் கொண்டார்.
இதை உணர்ந்த சூர்யகுமார் யாதவ், உடனடியாக மன்னிப்பு கேட்டு செய்கை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும், போட்டியின் முதல் நாள் முடிவில் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் சூர்யகுமார் யாதவை சூழ்ந்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது.
டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்திய அணி வரவிருக்கும் சில மாதங்களில் கிட்டத்தட்ட பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி, டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் நோக்கில் சூர்யகுமார் யாதவ் தற்போது புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
இதோடு துலீப் கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறார். இரு தொடர்களில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொருத்து அவர் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது குறித்து பிசிசிஐ இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.