Cricket
சர்வதேச டி20: சூர்யகுமார் சூப்பர் சாதனை
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்றது. தொடரை முழுமையாக கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது சூர்யகுமார் யாதவ் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள சூர்யகுமார் யாதவ், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹாசன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார். மிகக்குறுகிய காலக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இந்த மைல்கல் எட்டியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
தற்போதுவரை 71 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் சூர்யகுமார் யாதவ் 2,432 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 42.67 ஆகும். சமீபத்திய போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் உலகளவில் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார். இதன் காரணமாகவே இவர் தொடர் நாயகன் விருதுகளை குவிக்கிறார்.
அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹாசன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது அணிக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகின்றனர். இவர்கள் வரிசையில், தற்போது சூர்யகுமார் யாதவ் அணிக்கு தேவையான சூழலில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.