Connect with us

Cricket

டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில் இருந்தே, இந்தியா இந்த முறை ராகுல் டிராவிட்-க்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

முன்னாள் வீரர்கள் துவங்கி ரசிகர்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிட்-க்காக இந்த முறை கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஆர்வமுடன் கருத்தை பகிர்ந்து வரும் இந்திய அணி வீரர் ரவிசந்திரன் அஷ்வின் இந்த விவகாரம் குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அணியாக விளையாடக்கூடிய போட்டி ஒன்றை தனிநபருக்காக பில்டு-அப் செய்வது, ஆரோக்கியமான சூழலில் ஏற்படக்கூடிய மிக மோசமான காரியம் ஆகும். இந்த நபரை எனக்கு நன்றாக தெரியும். இதுபற்றி அவரிடம் கூறிய போதே, அதனை தனக்கே ஏற்றவகையில் அதை திசைதிருப்பிவிட்டார். இன்னும் ஒரு முறை போட்டியிடுவோம்,” என்று குறிப்பிட்டு கூடவே #proudofteamIndia எனும் ஹேஷ்டேக்-ஐ இணைத்துள்ளார்.

முன்னதாக உங்களுக்காக இந்த கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆதரவுக்குரல் எழுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்வி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், “ஒரு நபராக எனக்கு எதிரான ஒன்று, மொத்தமாக அது எனது மதிப்புகளுக்கு எதிரானது. மற்றவர்களுக்காக செய்யுங்கள் என்ற விஷயத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. இது குறித்த மேற்கோள் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் ஒருவர் இன்னொருத்தரிடம் நீங்கள் ஏன் இமயமலை மீது ஏற விரும்புகிறீர்கள் என்று கேட்பார். அதற்கு அவர் இமயமலை மீது ஏன் ஏற விரும்புகிறேன் என்றால், அது அங்கு இருக்கிறது. இதே போல் உலகக் கோப்பை ஏன் வெல்ல வேண்டும் என்று கேட்டால், ஏனெனில் அது அங்கு இருக்கிறது. அது யாருக்காகவும் இல்லை. யாராவது வெல்வார்கள் என்றே அது அங்கு இருக்கிறது. இன்னொருத்தருக்காக செய்யுங்கள் என்ற விஷயம் என் கருத்துக்கு எதிரானது. அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.

google news