Connect with us

Cricket

அரையிறுதிக்கு தகுதி.. ரஷித் கானுக்கு வீடியோ கால் செய்த தலிபான் அமைச்சர்

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தன்னை எதிர்த்து விளையாடிய வங்காளதேசம் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. இந்த வரிசையில், தான் வங்காளதேசம் அணியை வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆமிர் கான் மொடாகி தொலைபேசியில் ரஷித் கானை தொடர்பு கொண்டு பேசினார்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் ஆமிர் கான் மற்றும் ரஷித் தொலைபேசி உரையாடல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முபாரக் என்று கூறி பேச தொடங்கிய ஆமிர் கான் வீடியோ காலில் இருந்தபடி ரஷித் கான், அணியின் மற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இன்றைய போட்டியை தொடர்ந்து பேசிய ரஷித் கான், அரையிறுதியில் இருப்பது எங்களுக்கு கனவு போல் உள்ளது. இதற்கு இந்த தொடரை நாங்கள் துவங்கிய விதம் தான் காரணம். நியூசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு கிடைத்த நம்பிக்கையை எங்களால் நம்ப முடியவில்லை. எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

எங்களின் சாதனைக்காக சொந்த நாட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று கூறிய ஒரே நபர் பிரைன் லாரா மட்டும்தான். தொடரின் வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை சந்தித்த போது, உங்களது நம்பிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம் என்று தெரிவித்து இருந்தேன். நாங்கள் அரையிறுதி சென்று நீங்கள் கூறியது உண்மை என்று நிரூபிப்போம். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன், என்றார்.

வருகிற வியாழன் கிழமை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

google news