Cricket
புச்சி பாபு தொடர்.. ஜொலிக்காத நட்சத்திரங்கள்.. மும்பையை வீழ்த்திய தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழகம் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் அடங்கிய மும்பை அணியை தமிழக கிரிக்கெட் சங்கத்தின் டிஎன்சிஏ லெவன் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த போட்டியின் நான்காவது நாளில் மும்பை அணி 510 ரன்களை வெற்றி இலக்காக துரத்தியது. எனினும், மும்பை அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி வீரர்கள் பேட்டிங்கில் கோட்டைவிட்டதால், தமிழக அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய தமிழக அணிக்கு சிவி அச்யூத் மற்றும் ஆர் சாய் கிஷோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக பேட்டிங்கில் களமிறங்கவில்லை. போட்டியின் போது அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. எனினும், இது வருந்தும் அளவுக்கு பெரிய காயம் இல்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கு பின் சற்று நலமாக உணர்ந்த சூர்யகுமார் யாதவ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை எடுத்துக் கொண்டார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 510 ரன்களை துரத்திய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்து இருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் போது மும்பை அணியின் துவக்க வீரர்கள் முஷீர் கான் 40 ரன்களிலும், திவ்யான்ஷ் சக்சேனா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.
தமிழக அணிக்கு அச்யூத் மற்றும் சாய் கிஷோர் தவிர்த்து எஸ் அஜித் ராம் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். புச்சி பாபு தொடரில் மும்பை அணியில் இடம்பெற்ற ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் என நட்சத்திர வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதுவே அந்த அணி மோசமான தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தது.