Cricket
ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி வழங்காததற்கு காரணம் இதுதான்
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பதவியேற்றுள்ளார். அடுத்த வாரம் துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவுதம் காம்பீர் தனது பணியை துவங்குகிறார். இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களுக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் உள்ளிட்டவைகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. மேலும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணி அறிவிப்பில் இருந்து தேர்வு குழு மற்றும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் புதிய கேப்டனை தேர்வு செய்வதில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றான நபரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி உள்ளனர்.
கடந்த ஜனவரி 1, 2022 ஆம் தேதியில் இருந்து இதுவரை நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 46 போட்டிகளில் மட்டும்தான் விளையாடி உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சில போட்டிகளில் மட்டும்தான் விளையாடவில்லை.
சூர்யகுமார் யாதவ் கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற வகையில் வென்றார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது, அவருக்கு பதவி வழங்காததற்கு காரணமாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்தும் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.