Cricket
மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் மற்றும் முர்சிதா கதுன் முறையே 6 மற்றும் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த இஷ்மா தஜிமும் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையிலும், வங்காளதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிதானமாக விளையாடிய சுல்தானா 51 பந்துகளில் 32 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்களில் சொர்னா அக்தர் மட்டும் 19 ரன்களை எடுத்தார்.
கடைசியில் களமிறங்கிய நஹிதா அக்தர் மற்றும் மருஃபா அக்தர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். பூஜா வஸ்த்ராக்கர் மற்றும் தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 26 மற்றும் 55 ரன்களை எடுத்த நிலையில், 11 ஆவது ஓவரில் இந்திய அணி 83 ரன்களை குவித்து பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.