latest news
100 கோடி நிலமோசடி வழக்கு – எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது!
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக இவர் மீது வழக்குப் பதியப்பட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்க்கும்பொருட்டு இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்வதில் தீவிரம் காட்டினர். தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், விஜயபாஸ்கர் தலைமறைவானார். தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீஸ் நேற்று கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடுத்தகட்டமாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக, அந்த நிலத்தின் ஆவணங்கள் மாயமானதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அந்த ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விசாரணை அறிக்கை கொடுத்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்தே அவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்திருக்கிறது.