Cricket
ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்.. நோமன் அலி கனவில் மண்ணை அள்ளி போட்ட நசீம் ஷா..!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் நசீம் ஷா-வின் அபார பந்துவீச்சு காரணமாக நோமன் அலி பத்து விக்கெட்களை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் நோமன் அலி சிறப்பாக பந்து வீசினார். இலங்கை அணி விக்கெட்களை அபாரமாக கைப்பற்றிய நோமன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்து விக்கெட்களை ஒரே இன்னிங்ஸ்-இல் வீழ்த்தும் தருவாயில் இருந்தார். இந்த நிலையில், தான் நசீம் ஷா பந்து வீச வந்தார்.
எதிர் அணியின் டெயில் என்டர் பேட்ஸ்மன்கள்- பிரபத் ஜெயசூரியா, அசிதா ஃபெர்னான்டோ மற்றும் திஷான் மதுஷனகா ஆகியோரின் விக்கெட்களை ஒரே ஓவரில் கைப்பற்றி அசத்தினார் நசீம் ஷா. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது பாகிஸ்தான் அணி வெளிநாட்டு போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும். போட்டி முடிவில் நோமன் அலி தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். நோமன் அலி தனது 15-வது டெஸ்ட் போட்டியில் 70 ரன்களை கொடுத்து ஏழு விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்துள்ளது.
உள்நாட்டு போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியை இலங்கை அணி சந்தித்து இருக்கிறது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்-இல் இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 576 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 201 ரன்களை குவித்தார். அகா சல்மான் 132 ரன்களை குவித்தார். இதுதவிர பாகிஸ்தான் அணியின் ஷான் மன்சூட், சவுட் ஷகீல், முகமது ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸ்-இல் இலங்கை அணி 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.