latest news
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி…மருத்துவமனையில் தீவிர சிகிட்சை…
சாலை போக்குவரத்தின் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விதமான விழிப்புண்ர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அஜாக்கிரதையாக செயல்படுவதால் விபத்துகள் ஏற்பட்டும் வருகிறது. குறிப்பாக பேருந்து பயணங்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதனால் விபத்துக்கள் பல இடங்களில் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்த விதமான ஆபத்தான பயணத்தினை மேற்கொள்ளாமல் இருக்க எத்தனையோ விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டாலும், அதனை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பயணித்து உயிரை இழந்தும், படுகாயமடைந்தும், நிரந்தர ஊனமாக மாறியவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்திலிருந்து கல்லூரி மாணவி தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவி தேஜஸ்வினி விடுமுறை தினமான இன்று தட்டச்சு பயிற்சியை முடித்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார், அரசு பேருந்தில் பயணித்திருக்கிறார் தேஜஸ்வினி. பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டிருக்கிறது.
இதனால் பேருந்தின் படிக்கட்டில் நின்ற படியே பயணித்து வந்திருக்கிறார். இரணியல் பகுதியில் சற்று வேகமாக சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்தை அதன் ஓட்டுனர் சாலையின் வளைவில் திருப்பியிருக்கிறார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார் தேஜஸ்வினி. மாணவி தவறி விழுந்ததை உணர்ந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியிருக்கிறார். அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களும், பேருந்தில் பயணித்து வந்த சகபயணிகளும் தேஜஸ்வினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி தேஜஸ்வினிக்கு மருத்துவமனையில் தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.