latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளரை நியமிப்பதில் இழுபறி!..
2021ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தார். எனவே, பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இப்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது. வருகிற ஜூலை 10ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்ற நிலையில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட இதுவரை 7 பேர் கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2019ம் வருடம் அதே தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்தமிழ் செல்வன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
எனவே, இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், மற்றவர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை செய்து வருகிறார்.
விரைவில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட போகிறார் என்பது பற்றி கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் எல்லா தொகுதியிலும் திமுக வென்றது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சறுக்கலை ஏற்படுத்தியிருந்தது. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நெருக்கடி அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.