latest news
அண்ணாமலை வாயாலேயே வடை சுடுறாரு… பொய் செய்தி, அவதூறு பேசுவது இதான் அவர் வேலையே.. இபிஎஸ் பதிலடி…!
அதிமுக குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கின்றார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “விக்கிரவாண்டி தேர்தலை ஏற்கனவே நாங்கள் புறக்கணித்து விட்டோம். இதற்கான காரணத்தையும் நாங்கள் கூறிவிட்டோம். அதிமுக போட்டியிட்டு இருந்தால் மூன்றாவது அல்லது நான்காவது இடம் கிடைக்கும் என்று அண்ணாமலை கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மிகப்பெரிய அரசியல் ஞானி போல் அண்ணாமலை பேசுகின்றார். அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்து இருக்கின்றது என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றார். மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைந்து இரண்டாவது இடத்தில் அதிமுக இருந்தது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இப்போதைய ஆளுநர் ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட 2024 இல் பாஜக கூட்டணி குறைவான வாக்குகளை தான் பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு தொகுதி தேர்தலில் பரிசு பணம் என கொடுத்து வெற்றி பெற்றதை நன்கு அறிந்த அண்ணாமலை வேண்டுமென்றே அதிமுகவை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
வாயில் வடை சுடுவது, பொய்யான செய்திகளை பரப்புவது, அவதூறு பேசுவது தான் அவரின் வேலை. 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என்று அண்ணாமலை வாக்குறுதி கொடுத்தார். மேலும் தற்போது பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா? பாஜக அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் பெரும்பான்மையை இழந்து வருகின்றது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் கேட்டு தமிழகத்திற்கு என்ன நல்ல விஷயங்களை பெற்றுக் கொடுத்தார் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். நேற்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுகவை பற்றி பேசிய அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இபிஎஸ் பேசியிருக்கின்றார்.