cinema
அறிவுரை சொன்ன ஆந்திர துணை முதல்வர்…மன்னிப்பு கேட்ட கார்த்தி…
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் திருப்பதி பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திரும்பும் திசை எல்லாம் திருப்பதி கோவில் லட்டு பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையாகி விட்ட நேரத்தில் திரைப்பட விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண்.
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள “மெய்யழகன்” திரைப்படம் இம்மாதம் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோ நிகழ்ச்சி ஆந்திராவில் நடக்க, அதில் படத்தின் நாயகனான கார்த்தி பங்கேற்றார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என கேட்க, அது உணர்வுப்பூர்வமான விஷயம், லட்டு பற்றி பேச வேண்டாம் என கார்த்தி கூறியிருந்தார்.
கார்த்தியின் இந்த பேச்சிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சனாதன தர்மம் குறித்து பேசும் போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. அதோடு வெங்கடேச பெருமானின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் தனது சார்பான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கார்த்தி.