Cricket
தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது கிட்டத்தட்ட இரண்டறை நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும், எஞ்சியிருந்த கொஞ்ச நேரத்தில் இந்திய அணி துரிதமாக செயல்பட்டதோடு, போட்டியில் மிக துரிதமாக செயல்பட்டு வெற்றியை தட்டித்தூக்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அதுவரை பார்த்திராத சம்பவங்கள் பல அரங்கேறின. நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். இதனால் அந்த அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸை ஆடியது. இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதைத் தொடர்ந்து நான்காம் நாளின் கடைசி செஷனில் 2-வது இன்னிங்ஸ் பேட் செய்ய வங்கதேசம் அணி களமிறங்கியது. அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் வங்கதேசம் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது போட்டியில் கமென்ட்ரி செய்து வந்த முன்னாள் வங்கதேச வீரர் அத்தர் அலி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் வங்கதேசம் பேட்டர்களுக்கு ஏதேம் அறிவுரை கூற விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் கமென்ட்ரியில் வைத்து மைக்கில், “ஒரு இந்தியராக், அவர்களிடம் விரைவில் அவுட் ஆக சொல்வேன்,” என்று பதில் அளித்தார்.
பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் வீரர்களுக்கு அறிவுரை கேட்டவருக்கு, சுனில் கவாஸ்கர் அளித்த பதில் அவர் மட்டுமின்றி அதனை கேட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுனில் கவாஸ்கரின் டைமிங் பதில் இந்திய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.