latest news
சீசன் அமர்க்களம் தான்…இன்னைக்கு குளிக்க போனா கும்மாளம் தான்…
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போடப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பத்து, பதினைந்து நாட்களாகவே குற்றாலத்தின் சீசன் நிலவரம் உச்சத்தில் இருந்து வந்தது. மிதமானது முதல் வேகமான காற்று, வானத்தை சூழ்ந்த கருமேகங்கள், அவ்வப்போது சாரல் என குளு குளு குற்றாலமாக மாறி விட்டது.
கேரளாவில் பெய்த கனத்த மழை அதனை தொடர்ந்து குற்றால அருவிகளில் சீறிப்பாய்ந்த வெள்ளம், பாதுகாப்பு காரணங்களால் குளிக்க தடை இது குற்றாலத்தின் மறுபக்கம்.
கடந்த சனிக்கிழமை இரவு வரை அருவிகள் அனைத்திலும் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து மகிழ்ந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மறு நாள் காலை முதல் காத்திருந்தது அதிர்ச்சி. திடீரென அதிகரித்த தண்ணீரின் அளவால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வரை குளிக்க தடை விதிக்கப்பட்டது. வார விடுமுறை நாள் அன்று அருவிகளில் ஆனந்தமாக குளிக்கலாம் என வந்தவர்களின் ஆசையில் மண் அள்ளிப்போடும் விதாமாகத் தான் இருந்தது குளிக்க விதிக்கப்பட்ட தடையானாது.
நேற்று மாலை முதல் அருவிகளில் விழுந்த தண்ணீர் இயல்பு நிலைக்கு திரும்பியதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர் சுற்றுலாப் பயணிகள்.
இன்று காலை பத்து முப்பது மணி நிலவரப்படி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்று பலமாகவே வீசி வருகிறது. சாரலும் அவ்வபோது இருந்து வருகிறது. மீண்டும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது சீசன். இதனால் இன்று குளிக்க செல்பவர்களுக்கு குதூகலம் காத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.