Cricket
ராகுல் டிராவிட் குறித்த சர்ச்சை – கொஞ்சம் தப்பு நடந்திருக்கு..முன்னாள் வீரர் அதிரடி..!
வெஸ்ட் இன்டீஸ்-இல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வுயற்றதை கொண்டு, இந்திய அணி உலக கோப்பையை வெல்லாது என்ற முடிவுக்கு வரக்கூடாது என முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்று இருக்கிறது.
இரண்டு டி20 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளால், ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். வெஸ்ட் இன்டீஸ் தொடரை தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால், இந்திய அணி வீரர்களின் ஃபார்ம் இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு வேற மாதிரி இருக்கும் என்றும் கோப்பையை வெல்வதற்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்புவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய முகமது கைஃப் கூறியதாவது..,
“இந்திய அணி வெறும் இரண்டு போட்டிகளில் (வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டி20) தான் தோல்வியுற்று இருக்கிறது. இதனால் நாம் அதிக கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு தொடர் தோல்விகளால் அதிகளவில் எதிர்மறையான தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. ஆனால் நமது அணி கடும் போட்டியை ஏற்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. நான் இரண்டு தொடர் தோல்விகளால் நமது அணி மீதான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள போவதில்லை. ஒரே ஒரு விஷயம் என்னவெனில், முக்கிய வீரர்கள் இல்லாதது மட்டும் தான்.”
“பும்ரா அணியில் இல்லாதது மிகப் பெரிய தாக்கமாக இருக்கும். அவர் முழுமையாக உடல்நலன் தேறி இருப்பின்.. ஒரு விஷயம் அவர் முழுமையாக குணமடைவது மற்றொரு விஷயம் போட்டிக்கு ஏற்ற உடல் வலிமை பெறுவது தான். அவர் அதனை பெற்றுவிட்டால், இந்திய அணிக்கு அது மிகப்பெரும் துணையாக இருக்கும். பும்ரா முழு உடற்தகுதியுடன் திரும்பும் பட்சத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துவிடும்.”
“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் தோல்வி அடைந்திருப்பதாக பலரும் பேச துவங்கி உள்ளனர்.”
“தவறுகள் நடைபெற்று இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், பும்ரா இல்லாத இந்திய அணியை வைத்து விளையாடுவது மிகவும் கடினமான ஒன்று. அவர் போட்டிகளில் வெற்றி பெற வைக்கும் திறன் கொண்டிருக்கிறார். மேலும் ரோகித் ஷர்மா செயல்படாமல் போனதையும் சிந்திக்க வேண்டும்.”
“பும்ரா முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பும் பட்சத்தில்.. அவர் 50 சதவீத போட்டியை வெற்றி பெற செய்திடுவார். பும்ரா அணியில் இருந்தால், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரும் அணிக்கு திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். உலக கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வீரர்கள் நமது அணியில் உள்ளனர்,” என்று தெரிவித்தார்.