latest news
பானிபூரி கடைகளுக்கு கடிவாளம்… இதெல்லாம் கட்டாயம் வாங்கணும்… அரசு போட்ட உத்தரவு…!
தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் பானி பூரி கடைகளில் விற்கப்படும் மாதிரிகளில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் மற்றும் ரசாயன பொருள்கள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் கர்நாடக முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல கடைகளுக்கு சீல் வைத்திருந்தார்கள்.
பானி பூரி அனைவருக்கும் மிகவும் பிடித்த பொருள் என்பதால் இந்தியாவில் பல இடங்களில் விற்பனையாகி வருகின்றது. ஏற்கனவே உணவுப்பொருட்கள் விஷமாகி வரும் நிலையில் பாணி பூரியும் இப்படியா என்று உணவு பிரியர்கள் பலரும் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் தமிழகத்திலும் பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தமிழகத்தில் தெருவோரங்களில் இருக்கும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் நிறத்தை கொடுக்கும் ரசாயனத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சுகாதாரம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு அச்சம், சுகாதாரமற்ற தயாரிப்பு முறை உள்ளிட்ட புகார் காரணமாக பானி பூரி மற்றும் சாலையோர உணவகங்கள் கட்டாயம் இனி மருத்துவ சான்றிதழ்களையும் பதிவு உரிமையையும் பெற வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் சாலையோர உணவு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் அம்மா உணவகத்தில் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விற்பனை செய்யும் வியாபாரிகள் பங்கேற்றனர். குறிப்பாக பானி பூரி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் மற்றும் பயிற்சி பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றும் பதிவு உரிமம் மற்றும் மருத்துவ சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.