Cricket
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் பும்ரா.. உண்மையை புட்டு புட்டு வைத்த கிளென் மெக்ராத்..!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளார். காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இந்கி. அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஜஸ்பிரித் பும்ராவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலக கோப்பை தொடரில் விளையாட வைக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்கு முன்னோட்டமாக இருக்கும் வகையிலேயே ஜஸ்பிரித் பும்ரா ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாகவும் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட இருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக பிரபலமான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத், பும்ரா அணியில் திரும்புவது பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“பும்ராவுக்கு காயம் எப்படி இருக்கிறது, அவர் எதுமாதிரியான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார் என்பதை பொருத்தே அவரின் செயல்பாடுகள் பற்றி கூற முடியும். அவர் தரமான பவுலர் என்பதால், அவரின் உடல்நிலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இந்த இடைவெளி அவருக்கு உதவியாகவே இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடைவெளி மிகவும் அவசியமான ஒன்று ஆகும். இதன் மூலம் அவர்கள் தங்களது உடலை வலிமைப்படுத்திக் கொள்ள முடியும்.”
“களத்திற்கு வெளியில் அவர் எதுமாதிரியான பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார், அவரது முதுகு பகுதி எப்படி இருக்கிறது, அவர் தனது பவுலிங் விதத்தில் ஏதேனும் மாற்றத்தை செய்திருக்கிறாரா என்பதை பொருத்தே அவரது ரிஎன்ட்ரி எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். அவர் எப்படி பந்து வீசுகிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.”
“அவர் தனது பழைய நிலைக்கு திரும்புவதை பார்க்க நான் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். அவர் தனது உடல் மீது கொடுக்கும் முயற்சி மற்றும் திறன் அவர் உடல்நிலை பற்றி தீர்மானிக்கும். களத்தில் போதுமான அளவுக்கு பணியாற்றி இருந்தால், அவர் தனது பழைய நிலைக்கு திரும்புவதை என்னால் பார்க்க முடியும்.”
“அவரிடம் போதுமான அனுபவம் உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக போதுமான போட்டிகளும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு அவர் தன்மீது பரிசோதனை செய்து கொள்ள முடியும். போட்டியில் இருந்து விலகி இருக்க 11 மாதங்கள் மிகவும் அதிகம் ஆகும். ஆனால், நிச்சயம் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு சில போட்டிகளே ஆகும். நான் விளையாடிய காலக்கட்டங்களில் இதுபோன்ற இடைவெளியில் இருந்து மீண்டுவருவது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்திவிடாது,” என்று தெரிவித்தார்.