latest news
மொபைலை மீட்க அணையை வற்ற செய்த நபர் – சம்பவம் வைரலானதால் வசமாக சிக்கிய அரசு அதிகாரி
சத்தீஸ்கரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் அணையில் விழுந்த தனது ஸ்மார்ட்போனினை மீட்கும் முயற்சியாக அணையில் இருந்து பல லட்சக்கணக்கான லிட்டர்கள் நீரை வெளியேற்றிய சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் அரங்கேறியது. இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய இந்த சம்பவத்தில், தடாலடி நடவடிக்கை மேற்கொண்ட அரசு அதிகாரிக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டு விட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா. இதன் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தின் கன்கெர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஷ்வாஸ், தனது நண்பர்களுடன் பாரால்கோட் அணை பகுதிக்கு இன்ப சுற்றுலா சென்றார்.
அணையில் நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராஜேஷ் ஸ்மார்ட்போனினை அணையில் தவறவிட்டார். விலை உயர்ந்த ஸ்மார்ட்போனினை அணையில் இருந்து மீட்கும் நோக்கில், ராஜேஷ் உடனடியாக உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியோடு, ஸ்மார்ட்போனினை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தேடுதல் வேட்டை பலன் அளிக்காத நிலையில், ராஜேஷ் நீர்ப்பாசன துறையின் உதவியை நாடினார். மேலும் அணையில் இருந்து நீரை வெளியேற்ற இரண்டு டீசல் பம்ப்புகளை வாடகைக்கு எடுத்தார்.
ரூ. 7 ஆயிரத்து 500 விலையில் டீசல் பம்ப்புகள் உதவியுடன் அணையில் இருந்து 21 லட்சம் லிட்டர் நீரை ராஜேஷ் வெளியேற்றியதாக முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ராஜேஷ் அணையில் இருந்து 41 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றி, அணையை முழுமையாக வற்ற செய்தது அம்பலமாகி இருக்கிறது.
ஸ்மார்ட்போனினை மீட்பதற்காக அணையில் இருந்த நீரை வேண்டுமென்றே வெளியேற்றிய ராஜேஷ் விஷ்வாசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெளியேற்றிய நீருக்கான தொகையாக ரூ. 43 ஆயிரத்து 092 தொகையை செலுத்த ராஜேஷ் விஷ்வாசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து நீரை வெளியேற்றிய ராஜேஷ் விஷ்வாஸ் மொத்தத்தில் ரூ. 53 ஆயிரத்து 092 செலுத்த பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நீர்ப்பாசன துறையில் பணியாற்றி வரும் துணை பிரிவு அலுவலர் ஆர்.சி. திவாருக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது. மூத்த அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், நீரை வெளியேற்ற அனுமதி அளித்தது ஏன் என்று திவார் பதில் அளிக்க வேண்டும் என்றும், நீரை வெளியேற்றியதற்கான கட்டணத்தை திவாரின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளலாமா என்றும் சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.