latest news
96 வயது காதலியை கரம் பிடித்த 100 வயது முதியவர்!.. ஒரு சுவாரஸ்ய சம்பவம்!..
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சீனாவில் 80 வயது முதியவர் 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் 100 வயது முதியவர் தனது காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் பிறந்தவர் டெரன்ஸ். 1942ம் வருடம் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் பெரும் பங்கு ஆற்றியவர் இவர். பழுதடைந்த பிரான்ஸ் விமானங்களை சரி செய்யும் வேலையை டெரன்ஸ் செய்திருக்கிறார்.
அதன்பின் அமெரிக்கா திரும்பிய டெரன்ஸ் 1948ம் வருடம் தெல்மா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன், 8 பேரக்குழந்தைகள், 10 கொள்ளு பேரக்குழந்தைகள் என 70 வருடங்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் டெரன்ஸ். 2018ம் வருடம் தெல்மா இறந்துவிட்டார். எனவே, தனிமையில் வாடினார் டெரன்ஸ்.
அப்போதுதான் 96 வயது ஜீன் ஸ்வெர்லினை சந்தித்தார். ஜீன் திருமணமாகி கணவரை இழந்தவர். இவருக்கும், 2 மகள்கள், மகன், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவர் மீது காதல் வசப்பட்ட டெரன்ஸ் இதை ஜீன் ஸ்வெர்லினிடம் கூறினார். அவரும், டெரன்ஸின் காதலை ஏற்றுகொண்டார்.
இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் இவர்களின் திருமணம் நடந்தது. அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோர் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்ச்சியில் கலந்து கொள்ளுமாறு டெரன்ஸ் – ஸ்வெர்லின் தம்பதிக்கு சிறப்பு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது.