Connect with us

Cricket

பும்ரா இல்லைனா இந்தியாவுக்கு உலக கோப்பை டவுட் தான்!.. அதிர்ச்சி அளித்த முன்னாள் வீரர்..!

Published

on

Jasprit-Bumrah-Featured-Img

ஐயர்லாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா தலைமை வகிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா களத்தில் இறங்க இருக்கிறார். விரைவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் துவங்க இருப்பதை ஒட்டி, ஐயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், உலக கோப்பை 2023 தொடரில் பும்ரா விளையாடாத பட்சத்தில், கடந்த டி20 உலக கோப்பையில் ஏற்பட்டதை போன்றே, இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,

Jasprit-Bumrah

Jasprit-Bumrah

“உலக கோப்பையில் இந்திய அணிக்கான வாய்ப்பு, பெரும்பாலும் காயமுற்ற வீரர்களை சார்ந்தே இருக்கும். பும்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு, காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கிறார். களத்தில் அவரது செயல்பாடுகளை பார்த்தால் மட்டுமே அவர் எந்த அளவுக்கு உடற்தகுதி பெற்று இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியும்.”

“உள்நாட்டிலேயே நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு முழு உடற்தகுதியுடன் கூடிய பும்ரா நிச்சயம் தேவை. பவுலிங்கை பொருத்தவரையில் இரண்டு அணிகளை வைத்திருக்க முடியாது. பும்ரா விளையாடவில்லை எனில், 2022 ஆசிய கோப்பை மற்றும் 2022 டி20 உலக கோப்பை தொடர்களை போன்றே உலக கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவ வேண்டிய சூழல் உருவாகும். அவருக்கு மாற்று வீரர் நம்மிடம் இல்லை.”

Jasprit-Bumrah-Kaif

Jasprit-Bumrah-Kaif

“தற்போதைய இந்திய அணி கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மிக முக்கியமாக பும்ரா என முக்கிய வீரர்கள் இன்றி அத்தனை உறுதியாக தெரியவில்லை. வெஸ்ட் இன்டீஸ் சுற்று பயணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அணி எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட மாட்டேன். ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டுமெனில், அவர்கள் அணியில் தேர்வு செய்திருக்க கூடாது. அவர்களை ஆசிய கோப்பையை வைத்து மதிப்பீடு செய்து, 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யலாம். ஆசிய கோப்பையில் இருந்து, அவர்கள் விளையாடும் 11 பேர் யார் யார் என்றும், அவர்களுக்கு மாற்று வீரர்கள் யார் யார் என்று தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.”

“இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி இருப்பதால், அவர் அணியில் இருப்பார். ஆனாலும் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என அனைவரும் அணியில் இருப்பார்களா என்று தெரியவில்லை. இஷான் கிஷன் கே.எல். ராகுலுக்கு மாற்று விக்கெட் கீப்பராக இருப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலக கோப்பைக்கான இந்திய அணி போட்டி அரையிறுதியில் துவங்கும். அவர்கள் இரண்டு பெரிய போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

google news