Cricket
எங்களை பற்றி கவலையே இல்லை.. கொதித்து எழுந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்..!
ஆசிய கோப்பை 2023 அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. முன்னதாக ஆசிய கோப்பை 2023 போட்டிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், நேற்று வெளியிடப்பட்ட அட்டவணை படி பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நேபாலை எதிர்கொள்கிறது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் லாகூர், முல்தான், கொலம்போ மற்றும் கண்டி என மொத்தமாக நான்கு இடங்களில் நடைபெறுகிறது. இதில் நான்கு போட்டிகளை பாகிஸ்தானும், மீதமுள்ள ஒன்பது போட்டிகளை இலங்கையும் நடத்துகின்றன.
மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ள ஆசியோ கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவுலும் மூன்று அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளும், க்ரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஆசிய கோப்பை 2023 ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த தொடர் முழுக்க துளியும் ஓய்வு கிடைக்காது. மற்ற அணிகளை போன்று இல்லாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அனைத்து போட்டிகளையும் ஒரே நாட்டில் விளையாட போவதில்லை.
துவக்க போட்டி நேபாலுக்கு எதிராக முல்தானில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணி இலங்கை செல்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் இடையே பாகிஸ்தான் வீரர்களுக்கு இரண்டு நாட்கள் இடைவெளி கிடைக்கும். ஒருவேளை பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால், அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்து மீதமுள்ள போட்டிகளில் விளையாட வேண்டும். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இது மிகவும் வித்தியாசமான அட்டவணையாக இருக்கிறது. பாகிஸ்தான் தனது முதல் போட்டியை பாகிஸ்தானிலும், இரண்டாவது போட்டிக்காக இலங்கை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.”
“மேலும் இலங்கை தனது முதல் போட்டியை இலங்கையிலும், இரண்டாவது போட்டிக்காக பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய இருக்கிறது. அங்கு அவர்களுக்கு நான்கில் இருந்து ஐந்து நாட்கள் இடைவெளி கிடைக்கும். பாகிஸ்தான் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், வெறும் இரண்டு நாட்களை மட்டுமே இடைவெளியாக பெற்று இருக்கிறது. அவர்கள் எங்களது வீரர்கள் பற்றி கவலை கொள்வதே இல்லை.” என்று அவர் தெரிவித்தார்.