Cricket
ஷாட் அடிக்கவே தெரியாதா? வெஸ்ட் இன்டீஸ் பேட்டர்களை கிழித்த இந்திய பயிற்சியாளர்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது, எனினும் வெஸ்ட் இன்டீஸ் வீரர்கள் ஷாட்களை அடிக்க முயற்சிக்கவே இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சீரிசில் வெஸ்ட் இன்டீஸ் அணி 0-1 என்ற அடிப்படையில் பின்தங்கி இருக்கிறது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 438 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. இதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹாம்ப்ரே வெஸ்ட் இன்டீஸ் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கச்சிதமாகவும், ஸ்லோவாகவும் இருக்கிறது. இறுதியில் தான் பிட்ச் லேசாக மாறியது. பேட்டிங்கிலும் வெஸ்ட் இன்டிஸ் தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஷாட்களை அடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லை.”
“எங்களது பவுலர்கள் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ, அதனை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்த பிட்ச்-இல் 20 விக்கெட்களை வீழ்த்துவது மிகவும் கடினமான காரியம் ஆகும். டொமினிகா பிட்ச்-இல் டர்ன் (turn) இருந்தது, ஆனாலும் அதனை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டோம். இந்த பிட்ச்-இல் 20 விக்கெட்களை வீழ்த்துவது சவாலான காரியம் ஆகும்.”
“எங்களின் முதல் இலக்கு, அவர்களை ஆல்-அவுட் பெறுவது தான், அதன்பிறகு என்ன நடக்கிறதோ அதை பார்த்துக் கொள்ளலாம். இது விக்கெட்களில் பவுலர்களுக்கு சற்றே கடிமான பணி தான், ஆனால் அவர்களும் அப்படி விளையாட கூடாது, முடிவுகளை பெற முயற்சிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், வெஸ்ட் இன்டீஸ் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்களை குவித்து இருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் ஆட்டத்தை பார்க்கும் போது அவர்கள் போட்டியை டிரா செய்ய முயற்சிப்பதாகவே தெரிகிறது.
போட்டியில் இரண்டு நாட்கள் மீதம் இருக்கும் நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் சில விக்கெட்களை எடுத்தால், ஆட்டத்தின் போக்கு மாறும் என்று ஹம்ப்ரே தெரிவித்து இருக்கிறார்.