Connect with us

Cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்

Published

on

இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைக்க உள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 132 ரன்களை அடித்தால் புதிய சாதனை படைக்கலாம். தற்போதைய 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 1028 ரன்களை அடித்துள்ளார்.

அதன்படி இவர் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது 132 ரன்களை மட்டும் அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றை எடிஷனில் அதிக ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற முடியும்.

முன்னதாக 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஜிங்கியா ரஹானே 1159 ரன்களை அடித்து, ஒரே தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுதவிர ஒற்றை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 1000 ரன்களுக்கும் மேல் அடித்த மூன்று இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ஒருவர் ஆவார். இவர் தவிர ரஹானே மற்றும் ரோகித் சர்மா 1000 ரன்களை அடித்துள்ளனர்.

தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் ஆகியோர் 1028 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் 371 ரன்களை அடிக்கும் பட்சத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற முடியும்.

 

google news