Cricket
ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள் மட்டும் அன்-கேப்டு வீரர்களாக கருதப்படுவார்கள் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது. எம்.எஸ். டோனி ரசிகர்களுக்காக அடுத்த சீசனில் விளையாட ஆர்வம் காட்டிய நிலையில், ஐபிஎல் விதிகள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.
மேலும், அணியில் தக்க வைக்கும் போது, பெரிய தொகையில் ரீடெயின் செய்யப்பட்டு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த டோனி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த விலையில் ரீடெயின் செய்ய முடியும் எனில், அடுத்த சீசனில் எம்எஸ் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் பிசிசிஐ நடத்திய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
அந்த அறிவிப்பில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அன்-கேப்டு வீரராக மாற்றப்படலாம். எனினும், இவ்வாறு மாற்றப்படுவதற்கு அந்த வீரர் கடைசி ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கக்கூடாது. மேலும், பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம்பெற்றிருக்கக் கூடாது. இந்த விதியின் படி சென்னை அணி எவ்வித தயக்கமும் இன்றி எம்.எஸ். டோனியை அடுத்த சீசனில் விளையாட வைக்க அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.