Cricket
IPL 2025: டெல்லி கேப்டன் ஆகிறார் அக்சர்.. இது லிஸ்ட்-லயே இல்லையே..!
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. ஆண்டு இறுதி நெருங்கி வரும் நிலையில், ஐபிஎல் தொடர்பான தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளன. முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும்? என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் அது குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக கசிந்து வந்தன.
தற்போது ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி, இம்மாத இறுதியில் அணி நிர்வாகங்கள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்க விரும்புகின்றன என்பது தொடர்பான தகவல்களை வழங்க பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், அடுத்த சீசனில் வேறொரு அணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த சீசனில் புதிய கேப்டனோடு களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அக்சர் பட்டேல் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது நடைபெறாத பட்சத்தில் டெல்லி அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி அணி வட்டார நபர்களில் ஒருவர், “ஆம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய கேப்டனை தேடுகிறது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் பட்டேல் டெல்லி அணியின் புதிய கேப்டன் ஆகலாம், அல்லது அணி நிர்வாகம் ஐபிஎல் ஏலத்தில் வேறொரு வீரரை கேப்டனாக நியமிக்கலாம்,” என்று தெரிவித்தார்.