Cricket
மூன்றாவது டி20 – சாஹலை பின்னுக்குத் தள்ளி வேற லெவல் சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சாதனை படைத்து புதிய மைல்கல் எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்று இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முப்பது போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப் யாதவ் 50 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரராக யுஸ்வேந்திர சாஹலை முந்தியுள்ளார்.
இலங்கை அணியின் மர்மமான சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். இவர் இந்த மைல்கல்லை வெறும் 26 போட்டிகளில் விளையாடி எட்டியுள்ளார். மிகக் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் மென்டிஸ்-யே சாரும். இதனை இவர் 600 பந்துகளில் எட்டியுள்ளார்.
போட்டியை பொருத்தவரை குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்களையும், அக்சர் பட்டேல் மற்றும் முகேஷ் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதலில் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு பிரான்டன் கிங் 42 பந்துகளில் 42 ரன்களையும், ரோவன் பொவெல் 19 பந்துகளில் 40 ரன்களையும் வீழ்த்தி அசத்தினர்.
டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். எனினும், இந்திய அணி பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது. 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி அணிக்கு சுமாரான துவக்கத்தையே கொடுத்தது. அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் ஆறு ரன்களுக்கு நடையை கட்டினார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 83 ரன்களை குவித்து அல்சாரி ஜோசப் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா தன் பங்கிற்கு 37 பந்துகளில் 49 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி கேப்டன் ஹர்திக் பான்டியா 15 பந்துகளில் 20 ரன்ளை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி இலக்கை 17.5 ஓவர்களிலேயே எட்டியது. போட்டி முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இழக்காமல் உள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இன்டீஸ் அணி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.