Connect with us

latest news

திருப்பத்தூரை பயமுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!.. பொதுமக்கள் நிம்மதி…

Published

on

leoparrd

சமீபகாலமாகவே தமிழகத்தின் சில இடங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதும், மக்களை தாக்குவது, கால்நடை விலங்குகளை இழுத்து செல்வது என அட்ராசிட்டி செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. அதன் அருகே கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் என மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளாக இருக்கிறது.

இந்நிலையில்தான், நேற்று மதியம் 3 மணியளவில் சிறுத்தை ஒன்று அங்கு நடமாடுவதை சிலர் பார்த்து அதிர்ந்து போனார்கள். உடனே அவர்கள் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். எனவே, அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர் முதலில் அது சிறுத்தை என நம்பவில்லை. காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றே நினைத்தார்கள்.

leopard

ஆனால், அவர்கள் கண்ணிலும் சிறுத்தை படவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுத்தை கலெக்டர் அலுவகத்திற்கு பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலை பள்ளிக்குள் நுழைந்தது. மேலும், அங்கு பெயிண்ட் அடித்து கொண்டிருந்த கோபால் என்பவரின் நெற்றி, காது பகுதிகளில் தாக்கிவிட்டு ஒரு இடத்தில் சென்று பதுங்கியது.

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அது மாணவிகளை தாக்கிவிடும் என அங்கிருந்த சிலர் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டிவிட்டனர். வகுப்புகளின் கதவை திறக்க வேண்டாம். மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம் என வனத்துறை எச்சரித்தனர். இந்த தகவல் திருப்பத்தூர் முழுவதும் பரவவே நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பயத்தில் அந்த பள்ளிக்கு வந்துவிட்டனர்.

அப்போது சிறுத்தை 10 அடி உயரமுள்ள ஒரு சுவரை தாண்டி குதித்து அருகில் இருந்த கார் நிறுத்தும் பகுதிக்கு சென்றது. இதைப்பயன்படுத்தி மாணவிகள் பத்திரமாக வெளியே வரவழைக்கப்பட்டு அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஷெட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தினர். இதனால், சிறுத்தை மயக்கமடைந்தது. அதன்பின் சிறுத்தையை கூண்டில் ஏற்றினர். 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்ததால் பொதுமக்களும், வனத்துறையினரும் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

google news