latest news
இஸ்லாமியருக்கு ஒரு இனிப்பான செய்தி.. ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு..!
ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து இருக்கின்றார்.
ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித பயணம். இஸ்லாமியர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் தங்கள் கடமைகளில் ஒன்றாக சவுதி அரேபியாவில் இருக்கும் மெக்காவிற்கு புனித பயணம் செல்வதை கருதுகிறார்கள். வருடம் தோறும் பல இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணித பயணம் மேற்கொள்வது வழக்கம்தான்.
தமிழ்நாட்டில் இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5801 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய 326 பேருக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்று இருந்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது “இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். இந்த கடமையை நிறைவேற்ற தமிழ்நாட்டில் இருந்து 5801 பேர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் ஹஜ் கமிட்டி சார்பாக அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தோம்.
தற்போது பயணத்தை மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய முதல் குழுவினரை வரவேற்கிறோம். அது மட்டும் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம்” என்று அவர் பேசியிருந்தார்.