latest news
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஐம்பது லட்சம்?…அதிர்ச்சி தரும் தகவல்…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு தமிழக கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை நேரில் சென்று சந்தித்து தனது ஆறுதலையும் கூறி வந்தார். தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் சென்னையின் நெருக்கடி மிகுந்த இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியது.
இந்த வழக்கில் தொடர்புடையதாகச் சொல்லி சிலர் சரணைடைந்தனர். அதில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ரவுடி திருவேங்கடம் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படும் மூன்று பேரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோர உள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் வங்கிக் கணக்கில் ஐம்பது லட்ச ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளதாக தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் வங்கிக் கணக்கிலிருந்து இந்த தொகை டெபாஸிட் செய்யப்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது. சரணடைந்த நபர்களின் செல்போன் பேச்சு விவரங்கள், வங்கிக் கணக்குகள் பற்றி விசாரிக்கும் போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், பல்வேறு கோணங்களில் கொலை வழக்கின் மீதான விசாரணையை நடத்தி வருகிறது காவல் துறை.