latest news
`கட்சியைக் கைப்பற்றுவதோடு காப்பாற்றுவதே முக்கியம்’ – ஓபிஎஸ் போடும் புது ரூட்!
கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து, `அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தினுடைய தொண்டர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டுகோள்’ என்கிற தலைப்போடு ஓபிஎஸ் விடுத்திருக்கும் அறிக்கையில், `எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும்.
பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அதிமுக என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியைக் களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத்தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து வரப்போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.
எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என்கிற சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதினும் கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிராகரித்திருந்தார். சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலிலும் பிஜேபி கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் களம்கண்டு ஓபிஎஸ் தோல்வியைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!