Cricket
146 ஆண்டுகளில் முதல் முறை!..வேற லெவல் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்..!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 563 ரன்களை குவித்து இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் 201 ரன்களும், சல்மான் அலி அகா சதம் அடித்து ஸ்கோரை வலுப்படுத்தினர்.
இதோடு சௌட் சகீல் தன் பங்கிற்கு 57 ரன்களை விளாசினார். இந்த அரைசதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் சௌட் சகீல் மிகவும் அரிதான சாதனையை படைத்திருக்கிறார். 27 வயதான சௌட் சகீல் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். இதில் அவர் ஆறு முறை அரைசதம் அடித்திருக்கிறார்.
இதுதவிர ஒரு சதம், ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். அந்த வகையில் தான் விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் அரைசதம் எடுத்த முதல் பேட்டர் என்ற பெருமையை சௌட் சகீல் படைத்திருக்கிறார். முன்னதாக சுனில் கவாஸ்கர், பசில் பட்சர், சயித் அகமது மற்றும் பெர்ட் சட்க்லிஃப் ஆகியோர் தங்களது முதல் ஆறு போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்துள்ளனர்.
போட்டியை பொருத்தவரை பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷஃபிக், தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார். மேலும் அகா சல்மான் ஆட்டமிழக்காமல் 132 ரன்களை குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.
கொலம்போவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்-இல் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. துவக்க வீரரான ஷஃபிக் 201 ரன்களுக்கு ஆட்டமிழக்க மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியின் அகா சல்மான் 132 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.