latest news
டெய்லி சிரிங்க பாஸ்… ஜப்பான் மாகாண அரசின் அடடே ஐடியா!
தங்கள் மக்கள் தினசரி சிரிப்பதை ஊக்குவிக்க ஜப்பானின் யமகாடா மாகாணம் சூப்பரான ஒரு ஐடியாவை செயல்படுத்தியிருக்கிறது.
யமகாடா மாகாண அரசு, மக்கள் தினசரி ஒருமுறையாவது சிரிப்பதன் மூலம் தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நோக்கில் புதிய சட்டமொன்றை இயற்றியிருக்கிறது. யமகாடா பல்கலைக்கழக மருத்துவத் துறை ஆய்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் ஊழியர்கள் சிரிப்புடன் மகிழ்ச்சியாக இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. அதேபோல், குடிமக்கள் சிரிப்பின் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தும் நாளாக ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளைக் கடைபிடிக்கவும் இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
சிரிப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனிதர்களின் ஆயுளையும் நீட்டிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரம், இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்ற குரலும் எழுந்திருக்கிறது. சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை இந்த சட்டம் கேள்விக்குள்ளாகுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.