Cricket
இப்படி ஆகிப்போச்சே…வருத்தத்தில் ரசிகர்கள்…நாளைக்கு நல்லது நடக்கும்…நம்புவோம்!…
இந்திய கிரிக்கெட் அணி உலகின் எந்த துருவத்தில் தனது பயணத்தை மேற்கொண்டாலும், அங்கு திரளாக சென்று அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து உற்சாகப்படுத்தி வருவதை பழக்கமாக வைத்திருக்கின்றனர் ரசிகர்கள். போட்டியில் இந்தியா தோல்வி முகத்தில் இருந்தாலும், கடைசி நிமிடம் வரை ஏதாவது மாற்றம் நடந்து விடும் என்ற நம்பிக்கையோடு மைதானத்திலும், டிவிக்கள் முன்னாலேயும் ஏக்கத்தோடு காத்திருக்கும் உணர்வு மிக்க ரசிகர்களை தனக்கென கொண்டிருப்பது தான் இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
டெஸ்ட், ஒன்-டே, டி-20 என எத்தகைய போட்டிகளாக இருந்தாலும் அதற்கு தங்களது வரவேற்பை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் இந்திய ரசிகர்களின் குணாதிசயமும் கூட. இப்படிப் பட்ட உணர்வு உள்ள ரசிகர்களை தங்களது சிறப்பான ஆட்டத்தால் ஆரவாரப்படுத்தி வருவதை பழக்கமாக மாற்றிக் கொண்டது சமீபத்திய இந்திய அணி.
அதிலும் இந்திய மண்ணில் வைத்து போட்டிகள் நடந்து விட்டால் கேட்கவே வேண்டாம், ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இருக்காது என்று தான் சொல்லியாக வேண்டும். சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வளர்ச்சியை கண்டு வரும் வங்கதேச அணிக்கு எதிரான தொடர் இந்தியாவில் நடந்த முடிந்த போது கூட கட்டுக் கடங்காத ரசிகர்களை காண முடிந்தது.
இதற்கு அடுத்த படியாக நியூஸிலாந்து அணி இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தை மேற்க்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் படி முதல் போட்டி இன்று காலை பெங்களூருவில் வைத்து துவங்குவதாக இருந்தது.
இந்நிலையில் மழை குறுக்கீட்டின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் டாஸ் கூட போடப்படவில்லை. இப்படித் தான் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிட்டது. முதல் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது, நான்காவது நாளிலிருந்து மட்டுமே ஆட்டத்தினை முழுமையாக நடத்த முடிந்தது.
தங்களுக்கு கிடைத்த இரண்டு நாட்களில் கூட இந்திய வீரர்கள் புயலாகப் புறப்பட்டு பங்களாதேசத்தை பந்தாடினர். ஆனால் வீரர்களின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வங்கதேசத்தை விட நியூஸிலாந்து அணி அதிக பலம் வாய்ந்தது. முதல் நாள் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியிருந்தாலும், நாளைய நாள் நல்லபடியாகவே விடியும், போட்டி நிச்சயம் நடைபெறும், இந்திய அணி வீரர்கள் பிரகாசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ஃபேன்ஸ்.