latest news
அடிச்சி தூக்குது ஆடிக்காத்து…வண்டிய மூவ் பண்ணலாமா குற்றாலத்த பாத்து?…
குற்றாலம் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பது பழமொழி அதே போலத் தான் சீசன் நிரம்பி வழியும் போது தான் குற்றாலத்தின் முழுமையான இதத்தை அனுபவிக்க முடியும். தமிழுக்கு வைகாசி மாத இறுதியில் துவங்கி விடும் பொதுவாக சீசன், ஆனி மாதத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து ஆடி மாதத்தில் உச்சம் பெற்று விடும்.
இந்த மாதங்கள் தான் தென் மேற்கு பருவ மழைக்கான காலமாக கணக்கிடப்படுகிறது. கேரளா மற்றும் குற்றாலத்தின் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையானது அருவிகளுக்கு நீர் வரத்தை வரவழைக்கிறது. ஆடி மாத காற்றும் குற்றால அருவிகளில் விழும் நீரை சாரலாக மாற்றி அங்குள்ளவர்களின் உடலை நனைய வைத்து விடுகிறது.
ஆடி மாதக்காற்றின் வேகத்தால் சாரல் கடக்கும் தூரமும் அதிகரிக்கும், இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பேரழகோடு காட்சியளிக்கும் குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இயல்பு நிலை திரும்பியதால் தடை நீக்கப்பட்டது. இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவியில் குளித்து மகிழ ஏதுவான நிலையே இருந்து வருகிறது.
காற்றின் வேகமும் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று போல இல்லாமல் இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. வார வேலை நாட்களில் எப்போதும் காணப்படும் கூட்டத்தின் அளவே இன்றும் காணப்பட்டது. சாரலும் அவ்வப்போடு விழுந்து தனது பணியை சரியாகச் செய்தது. மொத்தத்தில் அதிக நேரம் குளித்து குற்றாலத்தின் சீசனை முழுமையாக அனுபவித்து மகிழ நினைப்பவர்களுக்கு ஏதுவான நாள் இன்று.