latest news
முதல்வர் ஸ்டாலினால் மகிழ்ச்சியே…உருக்கமாகப் பேசிய சீமான்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா சென்றிருப்பது குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் நிறுவனங்களை ஈர்த்து அவர்களது நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வைக்க, அதன் மூலம் வேலை வாய்ப்பினை அதிகரிக்க அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து காரசாரமாக பேசிய சீமான், நாட்டை கூறு போட்டு விற்கும் செயல் இதுவென கடுமையாக சாடினார்.
இதே வேலையை செய்வதாக சொல்லி பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமரை தான் விமர்சித்து வந்தது போல, இப்போது ஸ்டாலினை பற்றி பேச வேண்டிய நிலை வந்து விட்டதாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா சுற்றுப் பயணத்தின் போது உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டிய வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அவர் உடற்பயிற்சி செய்து நலமுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சி தந்ததாக சொன்னார்.
அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்த காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
அசோக் நகர் பள்ளி விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிந்து விட்டது. இது போன்ற விஷயங்கள் தெரியாமலேயே போயிருந்தால் இது போன்ற சொற்பொழுவுகள் நடத்தப்படுவது பழக்கமாக மாறியிருக்கும் என்றார்.
புதிய கல்விக் கொள்கையில் இது போன்ற விஷயங்கள் இருக்கிறது. ஆசிரியர்களின் கால்களை கழுவுவது போன்ற செயல்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியால் தான் நடைபெறுகிறது.
ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் அரசு பள்ளியில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் அவசியம் குறித்து சாடியிருந்த சீமான், அந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை பயங்கரவாதி போல விமான நிலையத்திற்கே கைது செய்தது ஏன் என கேட்டார்.
தாய் பத்து மாதம் தான் பெற்ற குழந்தைகளை பாதுகாப்பார், ஆனால் ஆசிரியர்கள் பதினெட்டு ஆண்டுகள் அறிவுக்கருவறையில் வைத்து பாதுகாப்பவர்கள் என சொன்னார். அதே போல மகாவிஷ்ணு பற்றிய செய்தியை பெரிதாக்கியது வேறு ஒரு செய்தியை மறைக்க செய்யப்பட்ட செயல் என குற்றம் சாட்டினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.